தேசிய செய்திகள்

மின்னணு வாக்கு எந்திரங்களை கைவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்

மின்னணு வாக்கு எந்திரங்களை கைவிட்டு, நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

நமது நாட்டில் ஓட்டுச்சீட்டு முறைக்கு பதிலாக மின்னணு வாக்கு எந்திர முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் இதன் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

அதற்கு வலுவூட்டும் விதமாக, கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி மின்னணு வாக்கு எந்திரங்களில் முறைகேடு செய்துதான் வெற்றி பெற்றது என்று அமெரிக்காவில் வாழும் இந்திய மின்னணு தொழில் நுட்ப வல்லுனர் சையது சுஜா என்பவர் லண்டனில் இருந்து இணையவழியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதே நேரத்தில் மின்னணு வாக்கு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சமீபத்தில் வெளியாகி உள்ள தகவல்கள் மின்னணு வாக்கு எந்திரங்கள் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளன.

இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. பாரதீய ஜனதா கட்சியின் சதியை அம்பலப்படுத்துகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரங்களை கைவிட்டு, ஓட்டுச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும். இதுதான் 3 கட்டங்களில் பரிசோதிக்கத் தகுந்தது. இது மின்னணு வாக்கு எந்திரங்களில் முடியாது. இதை தேர்தல் கமிஷன் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தங்களது ஓட்டுகள் தொடர்ந்து அமைப்பு ரீதியில் கொள்ளையடிக்கப்படுவதாக மக்கள் உணரத் தொடங்கி உள்ளனர். மின்னணு வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து முதலில் கேள்வி எழுப்பியது பகுஜன் சமாஜ் கட்சிதான். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதே போன்ற கருத்தை தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவும் வெளிப்படுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் குறிப்பிடுகையில், மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்று இது தொடர்பான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதை அவர்கள் ஆதாரப்பூர்வமாக காட்டியும் உள்ளனர். ஜனநாயக அமைப்பில், மின்னணு வாக்கு எந்திரங்கள் பற்றி வாக்காளர்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. சந்தேக ஜனநாயகம், ஜனநாயகத்துக்கு சீரழிவு ஆகும். 120 நாடுகள் மின்னணு வாக்கு எந்திரங்களை பயன்படுத்தவில்லை. 20 நாடுகள்தான் மின்னணு வாக்கு எந்திரங்களை பயன்படுத்துகின்றன என கூறினார்.

மேலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதிசெய்து கொள்கிற ஒப்புகைச்சீட்டு முறை, தெலுங்குதேசத்தின் போராட்டத்தால் வந்தது. ஆனாலும் அது குறிப்பிட்ட சில தொகுதிகளில்தான் அமல்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்