பெங்களூரு:
பொதுமக்களின் பிரச்சினைகள்
முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தனது காவேரி இல்லத்தில் இருந்தபடி பெங்களூருவை சேர்ந்த மந்திரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் உள்பட மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-
பெங்களூருவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் காய்ச்சல் முகாம்களை அதிக எண்ணிக்கையில் நடத்த வேண்டும். உதவி மையங்களை 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். இதன் மூலம் பொதுமக்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்கப்படும். வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு உரிய மருந்துகளை வழங்குவது அவர்களுக்கு தொலைதூர சிகிச்சை மூலம் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்புலன்சுகள் பற்றாக்குறை
தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அந்தந்த மண்டல கமிஷனர்கள் மற்றும் துணை போலீஸ் கமிஷனர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். கண்காணிப்பு அதிகாரிகள் தங்களின் மண்டலத்தில் எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏதாவது குறைபாடுகள் குறித்து புகார்கள் வந்தால் அதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் உள்பட பணியாளர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மின் மயானங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிக நேரம் நீண்ட வரிசையில் நிற்கின்றன. இதனால் ஆம்புலன்சுகள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. அதனால் மின் மயானங்களில் உடல்களை கீழே உரிய ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும். கொரோனா விவகாரத்தை நிர்வகிக்கும் பணியில் தன்னார்வலர்களை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா, கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், கலால்துறை மந்திரி கோபாலய்யா, தலைமை செயலாளர் ரவிக்குமார், சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜாவித் அக்தர், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.