புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில், காமன்காஸ் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு 2005-ம் ஆண்டு ஒரு பொது நல வழக்கு தொடுத்தது.
அந்த வழக்கில், தீராத நோய் உடையவர்கள், செயலற்ற நிலையில் முடங்கி, படுத்த படுக்கையாக கிடந்து வாழ விரும்பாதபோது, விதிமுறைகளுக்கு உட்பட்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிற செயற்கை சுவாசத்தை அகற்றி, கருணை கொலை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
அது மட்டுமின்றி, அரசியல் சாசனம் பிரிவு 21-ன் கீழ், கண்ணியத்துடன் வாழ்வதற்கு எப்படி ஒரு மனிதருக்கு அடிப்படை உரிமை இருக்கிறதோ, அதே போன்று கண்ணியத்துடன் மரணத்தை தழுவுவதற்கும் உரிமை உண்டு என்று அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது.
இதில் டெல்லி மருத்துவ கவுன்சில் ஒரு தரப்பினராக சேர்ந்து கொள்ளவும், கருணை கொலை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும் சுப்ரீம் கோர்ட்டு 2006-ம் ஆண்டு அனுமதி தந்தது.
இதற்கு இடையே, மும்பை மருத்துவமனையில் நெடுங்காலம் செயலற்றுப்போய் படுத்த படுக்கையாக கிடந்த அருணா சான்பாக் என்ற நர்ஸ் தரப்பில் தொடரப்பட்ட தனி வழக்கில், அவர் கருணை கொலை செய்யப்படுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து 2011-ம் ஆண்டு, மார்ச் 7-ந்தேதி உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து காமன் காஸ் அமைப்பு தொடுத்த பொது நல வழக்கில், 2014-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 23-ந்தேதி அப்போதைய தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இறுதி விசாரணையை தொடங்கியது.
டெல்லி மருத்துவ கவுன்சிலும் தன் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்தது.
ஆனால் 2014-ம் ஆண்டு, பிப்ரவரி 25-ந்தேதி, கருணைக் கொலை தொடர்பாக அருணா சான்பாக் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் குறைபாடுகள் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டி, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். அதே ஆண்டின் ஜூலை 15-ந்தேதி, 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, விசாரணையை தொடங்கியது.
கடந்த ஆண்டு, அக்டோபர் 11-ந்தேதி, தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களை கேட்டு முடித்து, தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த நிலையில், தீராத நோயால் படுக்கையில் செயலற்று கிடக்கிற நோயாளிகள் வாழ விரும்பாதபோது, கண்ணியமாக உயிர் துறக்க ஏற்ற வகையில், மருத்துவ உபகரணங்களை நீக்கி கருணை கொலை செய்வதற்கு அனுமதி வழங்கி நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர். இது தொடர்பாக வழிகாட்டும் நெறிமுறைகளையும் அவர்கள் வகுத்து அளித்தனர்.
கருணை கொலை தொடர்பாக அரசாங்கம் சட்டம் இயற்றுகிறவரையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தீர்ப்பை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வாசித்தார். அப்போது அவர் அமர்வில் இடம் பெற்று இருந்த நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் நான்கு விதமான கருத்துக்களை கொண்டிருந்தாலும்கூட, ஒரு நோயாளி செயலற்ற நிலையில், வாழ விரும்பாதபோது, தொடர்ந்து கஷ்டப்படுவதை அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டார். இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.
* படுக்கையில் தீராத நோயால் செயலற்று ஒருவர் கிடந்து வாழ விரும்பாத போது அவரைக் கருணை கொலை செய்வதற்கான முடிவை அவருடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் எடுக்கலாம்.
* அதை மருத்துவக்குழு பரிசீலிக்க வேண்டும்.
* நோயாளிக்கு வழங்கப்பட்டு வருகிற செயற்கை சுவாசத்தை விலக்கிக்கொள்ள மருத்துவர்கள் குழு முடிவு எடுக்கிறபோது, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
கருணை கொலை தீர்ப்பில் வழிகாட்டும் நெறிமுறை சொல்வது என்ன?
கருணை கொலைக்கு அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று வழங்கிய தீர்ப்பு, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தீர்ப்பில், சிகிச்சையை மறுக்கிற உரிமை, நோயாளிக்கு உண்டு என கூறப்பட்டு உள்ளது. இதை அவர் லிவிங் வில் என்னும் அறிக்கை மூலம் தெரிவித்து விடலாம் என கூறப்பட்டு உள்ளது.
இந்த லிவிங் வில் அறிக்கையை யார் எழுதலாம், அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டும் நெறிமுறையை தீர்ப்பு தந்து உள்ளது.
தீராத நோயால், படுத்த படுக்கையாக கிடந்து எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், வாழ விருப்பம் இல்லை என்ற சூழலில் இனியும் தொடர்ந்து சிகிச்சை தேவையில்லை என சிகிச்சையை மறுத்து, லிவிங் வில் அறிக்கை எழுதலாம்.
அதை எழுதுகிற நோயாளி, வயது வந்தவராக இருக்க வேண்டும். ஆரோக்கியமான மனநிலை உடையவராக இருக்க வேண்டும். தனது நோக்கத்தை தெரிவிக்கிற, அதனை செயல்படுத்துகிறபோது ஏற்படுகிற விளைவை அறிகிறவராக இருக்க வேண்டும்.
மருத்துவ சிகிச்சையை எப்போது நிறுத்தி விடலாம் அல்லது குறிப்பிட்ட ஒரு சிகிச்சையை எப்போது நிறுத்தி விடலாம் என்பதை தெளிவாக எழுதி விட வேண்டும்.
மேலும், வலி, வேதனை, துன்பம் போன்ற கஷ்டங்களைத் தொடர்ந்து தந்து, மரணத்தை தாமதப்படுத்திக்கொண்டு, கண்ணியத்தை இழக்கிற சூழலை சிகிச்சை உருவாக்குகிறபோது, அதை எப்போது நிறுத்தி விடலாம் அல்லது குறிப்பிட்ட எந்தவொரு மருத்துவ சிகிச்சையை வழங்குவதை நிறுத்தி விடலாம் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு வழிகாட்டும் நெறிமுறை தீர்ப்பில் இடம் பெற்று உள்ளது.