புதுடெல்லி,
டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனரிடம், தி.மு.க. எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் நியாயமான முறையில் தேர்தல் நடத்துவது கட்டுக்கதையாகிவிட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை அறிவிக்கும்போது, நியாயமும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் என்று நாங்கள் நம்பினோம்.
ஆனால் கடைசி 48 மணி நேரத்தில் ஆளும் கட்சியினரால் வாக்காளர்களுக்கு செய்யப்படும் பணப்பட்டுவாடாவினால் அந்த நம்பிக்கை சிதறடிக்கப்பட்டு விட்டது.
மீண்டும் அமைச்சர்கள்
ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் பணம் கொடுக்கப்படுவதாக அங்கு நடக்கும் சம்பவங்கள் மூலம் தெரிய வருகிறது. ஆனால் தேர்தல் கமிஷனால் இதை தடுத்து நிறுத்த முடியவில்லை. சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள் இந்த சட்டவிரோதங்களை அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
கடந்த முறையும் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. அமைச்சர்கள் அதிக அளவில் பணம் கொடுத்ததால்தான் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆனால் ஒரு அமைச்சர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படாது என்று தேர்தல் கமிஷன் கொடுத்த சமிக்ஞைதான் அவர்களை அந்தக் குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்ய வைத்துள்ளது.
நடவடிக்கை இல்லை
வருமான வரித்துறையும் ரூ.89 கோடி அளவுக்கு அவர்கள் செய்த முறைகேட்டை கண்டுபிடித்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அங்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை உருவாகாது என்று ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.
எங்கள் சந்தேகம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த முறையைவிட இப்போது எளிதாக பணப்பட்டுவாடாவிலும் பரிசுப்பொருள் வழங்குவதிலும் ஈடுபடுகின்றனர். கையும் களவுமாக அவர்களைப்பிடித்து ஒப்படைத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மீட்டுச் சென்றனர்
அவர்களில் பலரை தேர்தல் கமிஷனின் பறக்கும்படை பிடித்து வைத்திருந்தாலும் 100 பேருக்கும் அதிகமான சமூகவிரோத கும்பல் அவர்களை பறக்கும்படை பிடியில் இருந்து மீட்டுச்சென்றது. பறக்கும்படைக்கு அங்கிருந்த போலீசார் உதவி செய்யவில்லை. எனவே ஆளும் கட்சியுடன் போலீசார் கைகோர்த்து இருப்பது தெளிவாகிறது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வெளியேயும் வாக்காளர்களை அழைத்து அ.தி.மு.க.வினர் பணம் கொடுக்கின்றனர். அந்த இடங்களை குறிப்பிட்டு தலைமைத்தேர்தல் அதிகாரிக்கு புகார் கொடுத்தாலும் அதுபற்றிய நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
80 சதவீத பட்டுவாடா
பணம் கொடுக்கும் அ.தி.மு.க.வினரை மக்களும், தி.மு.க.வினரும் பிடித்துக்கொடுத்தாலும் போலீசார் அவர்களை காப்பாற்றிவிடுகின்றனர். எனவே 11 போலீஸ் அதிகாரிகளை மாற்றவேண்டும் என்று ஏற்கனவே மனு கொடுத்தோம்.
16-ந்தேதியன்று அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனுக்காக ரூ.100 கோடி அளவுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.20 கோடியை தி.மு.க.வினர் கண்டுபிடித்தனர். ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் என்ற அளவில் 80 சதவீத பணப்பட்டுவாடா முடிந்துவிட்டது. எனவே அவரை வேட்பாளர் நிலையில் இருந்து தகுதி இழப்பு செய்யவேண்டும்.
தகுதி இழப்பு
ஆனால் பணப்பட்டுவாடா தொகையை சில லட்சம் ரூபாய் என்ற அளவில் போலீசார் அறிக்கை அளித்தனர். குற்றவாளிகளை பிடித்து கொடுக்கும் போதெல்லாம், பறக்கும்படையினர் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் கூறி அவர்களை விடுவிக்கின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் சரியாக இல்லை. தேர்தல் நடத்தும் சூழ்நிலை அங்கு இல்லை. தேர்தல் கமிஷன் மீதிருந்த நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். எனவே மதுசூதனனை தகுதி இழப்பு செய்துவிட்டு, சம்பந்தப்பட்ட அ.தி.மு.க.வினர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, நியாயமான தேர்தல் நடப்பதை உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.