தேசிய செய்திகள்

எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு

எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க மத்திய காங்கிரஸ் அரசு அமித் ஷாவையும், போலீஸ் அதிகாரிகளையும் சிறையில் தள்ளியது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

தினத்தந்தி

ஹிம்மத்நகர்,

குஜராத் மாநிலம் ஹிம்மத்நகரில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளிலும் வெற்றி பெறச்செய்யுங்கள் என்று கேட்க நான் வந்துள்ளேன். இந்த நாட்டை தேசிய சக்திகள் ஆள வேண்டுமா? தேசத்துரோக சட்டத்தை நீக்கி பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள் ஆள வேண்டுமா? என்பதை இத்தேர்தல் முடிவு செய்யும்.

2004-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரை, மத்தியில் ஒரு ரிமோட் கண்ட்ரோல் அரசு செயல்பட்டது. ரிமோட் கண்ட்ரோலை யார் வைத்திருந்தார் என்பது உங்களுக்கு தெரியும். அந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் இருந்தவர்கள், குஜராத்தின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டனர். குஜராத் மாநிலம், இந்தியாவிலேயே இல்லை என்பதுபோல் இயங்கினர்.

நமது போலீஸ் அதிகாரிகளையும், ஏன், அமித் ஷாவையும் கூட சிறையில் தள்ளினர். எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க என்னென்ன செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்தனர்.

குஜராத்தை சீரழிக்க அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு அளிக்க வேண்டுமா? 4 தலைமுறைகளாக இந்த நாட்டை ஆண்ட தங்களை இந்த தேநீர் வியாபாரி கோர்ட்டுக்கு சென்று ஜாமீன் வாங்க வைத்து விட்டானே என்று அவர்கள் கோபத்தில் உள்ளனர்.

கடந்த முறை எனக்கு வாய்ப்பு அளித்தீர்கள். அவர்களை சிறை வாசலில் நிறுத்தினேன். மீண்டும் ஒருமுறை 5 ஆண்டுக்கு வாய்ப்பு அளித்தால், அவர்களை உள்ளேயே அனுப்பி விடுவேன். அவர்கள் பதவிக்கு வந்தால், அவர்களின் முதல் குறி குஜராத்தாகவே இருக்கும்.

எனக்கு எதிராக ராகுல் காந்தி பேசும் வார்த்தைகளை நீங்கள் ஏற்கிறீர்களா? ஆங்கிலேயர்கள், நமக்கு எதிராக தோட்டாக்களை பயன்படுத்தினார்கள். இவர்கள் வசைமொழிகளை பயன்படுத்துகிறார்கள்.

முதலில் அவர்கள் தேநீர் வியாபாரிக்கு எதிராக எதை வேண்டுமானாலும் பேசி வந்தனர். தற்போது, ஒரு சமுதாயத்தையே திருடர்கள் என்று கூறி வருகிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்