புதுடெல்லி,
அமெரிக்க கடற்படை தளபதி மைக்கேல் கில்டே 5 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று அவர் டெல்லியில் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அவர் கூறும்போது, உலகளாவிய பாதுகாப்புக்கு பங்களிப்பு செய்வதில் இந்தியா நீண்ட மற்றும் சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது என குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் டெல்லியில் இந்திய கடற்படை தளபதி கரம்பீர் சிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிராந்திய பாதுகாப்பு நிலைமை, இந்திய பசிபிக் நிலவரம், இருதரப்பு கடலோர பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் பற்றி இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். அமெரிக்க கடற்படை தளபதி மைக்கேல் கில்டே, மும்பையில் கடற்படையின் மேற்கு பிராந்திய கட்டளை மையம், விசாகப்பட்டினத்தில் கிழக்கு பிராந்திய கட்டளை மையம் ஆகியவற்றுக்கும் செல்கிறார்.