புதுடெல்லி,
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. முதல்கட்ட தேர்தல், பிப்ரவரி 10-ந் தேதி நடக்கிறது.
அதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அதாவது பிப்ரவரி 1-ந் தேதி, அடுத்த நிதியாண்டுக்கான (2022-2023) மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நெருங்குவதால், இந்த பட்ஜெட்டில் வாக்காளர்களை கவருவதற்கான கவர்ச்சிகரமான அம்சங்கள் இடம்பெறும் என்று பரவலான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆனால், கவர்ச்சிகரமான அம்சங்கள் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். எச்.டி.எப்.சி. வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் அபீக் பருவா கூறியதாவது:-
பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அம்சங்கள் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மத்திய அரசு நிதி சீர்திருத்தங்களை பின்பற்றி வருகிறது. 5 மாநில தேர்தலுக்காக, அந்த சீர்திருத்த நடவடிக்கைகளை காற்றில் பறக்க விடும் என்று தோன்றவில்லை.
இருப்பினும், தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்காக எந்த அறிவிப்புமே இடம்பெறாது என்றும் சொல்ல முடியாது என்று அவர் கூறினார்.
அம்பேத்கர் பொருளாதார பல்கலைக்கழக துணைவேந்தர் பானுமூர்த்தி கூறியதாவது:-
மிகவும் சிக்கலான நேரங்களில் கூட மத்திய அரசு யதார்த்த அணுகுமுறையை பின்பற்றுகிறது. அதில் இருந்து அவர்கள் விலகி செல்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கென சில விசேஷ அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று அவர் கூறினார்.
கோடக் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் சுவோதீப் ரக்ஷித் கூறியதாவது:-
5 மாநில தேர்தலை மனதில் வைத்து பட்ஜெட் தயாரிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. சில சமூக நல திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். ஆனால், நிதி ஒதுக்கீடு, பொருளாதார கொள்கைகள் விஷயத்தில் தேர்தலை கவனத்தில் கொள்ள மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
கொரோனா 2-வது அலையின்போது, நாட்டு மக்களுக்கு பண உதவி அளிக்க வேண்டும் என்று பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், மத்திய அரசு அதை புறக்கணித்து, பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. அதன் பலனாக, ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்தது. நிதி பற்றாக்குறை குறைந்தது. எனவே, இதே பாதையில் மத்திய அரசு செல்லும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.