புதுடெல்லி,
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது வெளிநாட்டுக்கு தப்பிவிட்டனர்.
வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நிரவ் மோடி வழக்கில் வருமான வரித்துறையை சேர்ந்த 8 உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணைய சேர்மன் சுஷில் சந்திராவிடம் சிபிஐ விசாரணையை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் அலுவலக உத்தரவின் பெயரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக நிதிஅமைச்சக தகவல்கள் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டு உள்ளது.
சுஷில் சந்திராவின் பதவி காலம் மே மாதத்துடன் முடிகிறது. அவருடைய பதவி காலத்தை நீடிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை மனு பிரதமர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது, அதற்கு இதுவே காரணம் எனவும் தகவல்கள் தெரிவித்து உள்ளது என செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பிரதம அலுவலக உத்தரவின்படி பதவி உயர்வை இறுதி படுத்துவதற்கு முன்னதாக அனைத்து சிபிடிடி உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஊழல் தடுப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவித்து உள்ளதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நிரவ் மோடியின் நிறுவனங்களில் நடந்த பண பரிவர்த்தனைகளில் தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தவறாக குறிப்பிடப்பட்டு உள்ளது, குறைத்து மதிப்பிடப்பட்டு உள்ளது என்ற நம்பிக்கையில் விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பான தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவுக்கு அனுப்பவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. விரிவான விசாரணையின் மூலம் இவ்விவகாரத்தில் முழுமையான தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.