மும்பை,
கொரோனா வைரசின் கோரப்பிடியில் இந்தியா சிக்கியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,44,178 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,29,53,821 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது 19,29,329 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில கடுமையா போராடி வருகின்றன. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது, தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்துவது, ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவு படுத்த வேண்டும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்புக்கூட்டம் கூட்ட வேண்டும் என்று சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ரஞ்சய் ராவத் கூறுகையில், இது மிகவும் எதிர்ப்பார்க்கப்படாத சூழ்நிலை, கிட்டத்தட்ட போர்கால சூழ்நிலை போன்று உள்ளது. அனைத்து இடங்களிலும் உச்சபட்ச குழப்பமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் இல்லை, கொரோனா தடுப்பூசிகளும் இல்லை. இது ஒட்டுமொத்தமான குழப்பமான சூழ்நிலையாகும். தற்போதைய நிலை குறித்து ஆலோசிக்க குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் கூட்டப்பட வேண்டும் என்றார்.