தேசிய செய்திகள்

டெல்லியில் டிராக்டர் பேரணி வன்முறை: விவசாய அமைப்பு தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம்

டெல்லியில் குடியரசு தின வன்முறை தொடர்பாக வழக்கில் சிக்கிய விவசாய அமைப்பு தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரமாக உள்ளனர்.

தினத்தந்தி

டிராக்டர் பேரணியில் வன்முறை

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கடந்த 26-ந்தேதி மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தினர். இந்த பேரணி வன்முறையாக மாறியது.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 400 போலீசார் காயமடைந்தனர். இதைப்போல போலீசார் நடத்திய தடியடியில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர்.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியிலும் விவசாயிகளின் ஒரு பிரிவினர் டெல்லி செங்கோட்டையில் மத கொடி ஒன்றை ஏற்றி வைத்தனர். இது நாடு முழுவதும் மிகுந்த அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

25 வழக்குகள் பதிவு

இந்த நிலையில் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக டெல்லி போலீசார் 25 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் இந்த வன்முறை தொடர்பாக விவசாய அமைப்பு தலைவர்கள் 37 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதால்தான், விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

அது மட்டுமின்றி அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னரே பேரணியை தொடங்கியது, அனுமதித்த எண்ணிக்கையை விட அதிக டிராக்டர்களை களமிறக்கியது, அனுமதிக்காத பாதைகளில் சென்றது என பல்வேறு சிக்கல்களுக்கு விவசாய அமைப்பு தலைவர்களே காரணம் என போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

37 தலைவர்கள் மீது வழக்கு

எனவே 37 தலைவர்கள் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது. இதில் விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான சன்யுக்தா கிசான் மோர்ச்சாவின் 6 செய்தி தொடர்பாளர்களும் அடங்குவர்.

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள இந்த 37 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி இவர்கள் அனைவரும் தங்கள் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

இதைப்போல இந்த தலைவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க அவர்களுக்கு எதிராக சுற்றறிக்கை (லுக் அவுட் நோட்டீஸ்) ஒன்றும் வெளியிட டெல்லி போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் நடந்த ஆலோசனைக்குப்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. வழக்கில் சிக்கியுள்ள தலைவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மற்றொரு அமைப்பு வாபஸ்

இதற்கிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வந்த பாரதிய கிசான் யூனியன் (லோக் சக்தி) என்ற அமைப்பும் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளது. இந்த தகவலை அமைப்பின் செய்தி தொடர்பாளர் சைலேஷ் குமார் கிரி நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த அமைப்பை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கடந்த டிசம்பர் 2-ந்தேதி முதல் நொய்டாவின் தலித் பிரேர்னா ஸ்தாலில் போராடி வந்தனர். விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையை தொடர்ந்து ஏற்கனவே 2 விவசாய அமைப்புகள்தங்கள் போராட்டத்தை விலக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்