மதுரா,
உத்தர பிரதேசத்தில் மதுரா நகரில் யமுனா விரைவுசாலையில் சென்ற பஸ் ஒன்று திடீரென பழுதடைந்து நின்று விட்டது.
இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறங்கி சாலையின் ஓரத்தில் நின்றிருந்தனர். அப்போது வந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த பயணிகள் மீது மோதியது. நேற்று அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இவ்விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்பது விசாரணையில் தெரியவரும்.