புதுடெல்லி,
விமானங்களில் பயணிகள் செல்போன்கள் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு டிராய்(இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) பரிந்துரைத்துள்ளது.
தற்போது விமானங்களில் செல்போன்கள் பயன்படுத்த பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. பல்வேறு பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், விமானப் பயணங்களின்போது செல்போன் சேவைகளை பயன்படுத்த அனுமதிக்கும் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குமாறு, டிராயிடம் மத்திய தொலைத்தொடர்புத் துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோரியிருந்தது. இதையடுத்து, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகளைக் கேட்டறிந்த டிராய், தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளது.
அதில், விமானப் பயணங்களின்போது செல்லிடப்பேசி மற்றும் இணையச் சேவையை பயன்படுத்த பயணிகளை அனுமதிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், விமானி அறைக்குள் இருக்கும் அதிர்வலைகளுக்கு, செல்போன் சிக்னல்களால் இடையூறு ஏற்படுத்தாத வகையில் சர்வதேசத் தரத்திலான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்; குறைந்தபட்சம் 3000 மீட்டர் உயரத்துக்கு மேல் விமானம் சென்ற பிறகே, செல்போன்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று டிராய் பரிந்துரைத்துள்ளது. இதேபோல, ஒரு சில கட்டுப்பாடுகளுடன் விமானங்களில் இணையச் சேவை பயன்பாட்டை அனுமதிக்கலாம் என்றும் டிராய் தெரிவித்துள்ளது. #TRAI #Flight