கொல்கத்தா,
மேற்கு வங்கத்தின் பாலிகங்கே, சத்தீஸ்கரின் கைராகர், பிகாரின் போச்சான், மராட்டியத்தின் கோலாப்பூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. இந்த தொகுதியை பாஜகவிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றுகிறது. இதுபோலவே பிகாரில் ஆர்ஜேடி வெற்றி பெற்றுள்ளது. சத்தீஸ்கரின் கைராகர் மராட்டியத்தின் கோலாப்பூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரசும் முன்னிலை வகித்து வருகின்றன.
அசன்சோல் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த பாபுல் சுப்ரியோ பதவியை ராஜிநாமா செய்து கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். பிறகு, பாலிகஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். காங்கிரஸிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்த நடிகர் சத்ருகன் சின்ஹா அக்கட்சி சார்பில் அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டார்.