புதுடெல்லி,
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய முத்தலாக் முறையை பின்பற்றுகிற வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறைக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப். நாரிமன், யு.யு. லலித், அப்துல் நசீர் ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. விசாரணையின் போது முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டுவந்தால் இஸ்லாமியர்கள் எந்த முறையில் விவகாரத்து செய்வார்கள் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி வைத்து இருந்தது.
முத்தலாக் கூறி உடனடியாக விவகாரத்து செய்யும் முறைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடையை விதித்தால், மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கான திருமண மற்றும் விவகாரத்து தொடர்பான புதிய சட்டமானது கொண்டுவரப்படும் என்றது மத்திய அரசு.
இன்று 4-வது நாள் விசாரணையில் இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) முத்தலாக்கை இஸ்லாமியர்கள் 1400 வருடங்களாக பின்பற்றுகிறார்கள் என தெரிவித்து உள்ளது. இந்து கடவுள் ராமர் அயோத்தியில் பிறந்தார் என இந்துக்கள் நம்பிக்கை கொண்டு உள்ளது போன்று இஸ்லாமியர்கள் முத்தலாக் மீது நம்பிக்கை கொண்டு உள்ளனர். கடந்த 1400 வருடங்களாக இஸ்லாமியர்கள் முத்தலாக் முறையை பின்பற்றுகிறார்கள், இது நம்பிக்கை சார்ந்த விவகாரமாகும். எனவே, இதில் அரசியலமைப்பு அறநெறி மற்றும் சமத்துவம் என்ற கேள்விக்கே இடம் கிடையாது என ஏஐஎம்பிஎல்பிக்கு ஆதரவாக ஆஜரான காங்கிரஸ் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில்சிபல் வாதிட்டு உள்ளார்.