தேசிய செய்திகள்

இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என்ற உத்தரவை பின்பற்ற மாட்டோம்: திரிபுரா அரசு

இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என்ற உத்தரவை பின்பற்ற மாட்டோம் என்ற வடகிழக்கு மாநிலமான திரிபுரா தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

அகர்தலா,

கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து கடந்த 23-ந்தேதி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டு இருந்த அறிவிக்கையில், இளம் கால்நடைகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரக் கூடாது. கால்நடை சந்தைக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவில்லை என்று எழுத்து வடிவில் ஒப்புதல் அளித்த பிறகே அந்த கால்நடைகளை விற்பனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் சில கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்து இருந்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக தென்மாநிலங்களில் கடுமையான எதிர்வினைகள் கிளம்பியுள்ளன.

இந்த நிலையில், வடகிழக்கு மாநிலமான திரிபுராவும் மத்திய அரசின் புதிய உத்தரவை பின்பற்ற போவது இல்லை என்று அறிவித்துள்ளது. இந்த தகவலை திரிபுரா மந்திரி அகோர் தேபர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மாடுகள் விற்பனை மற்றும் வெட்டுவது தொடர்பாக மத்திய அரசு புதியதாக கொண்டு வந்துள்ள விதிமுறைகள் மக்களின் நலன்களுக்கு எதிராக உள்ளதால் நாங்கள் இதை அமல்படுத்தமாட்டோம்.

மத்திய அரசு இந்த விதிமுறைகளை இன்னும் அனுப்பவில்லை. புதிய விதிகளை அறிவிக்கும் முன் எந்த ஆலோசனையும் எங்களிடம் நடத்தப்படவில்லை. தங்கள் மாடுகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டால், தங்களுக்கு தேவையில்லாத வளர்ப்பு பிராணிகளை மக்கள் எப்படி வளர்ப்பார்கள். சந்தைகளில் வாங்கப்படும் மாடுகள் இறைச்சிக்காகத்தான் என எப்படி தீர்மானம் செய்தார்கள் இவ்வாறு அவர் பேசினார். திரிபுராவில் சிபிஎம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்