தேசிய செய்திகள்

டி.டி.வி.தினகரனுக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

டி.டி.வி.தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தையும், அவர் கோரும் கட்சியின் பெயரையும் ஒதுக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு டெல்லி ஐகோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து டிடி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பான இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரும் வரை தங்கள் அணிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், தற்காலிகமாக கட்சி பெயரையும், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட பிரஷர் குக்கர் சின்னத்தையும் ஒதுக்கவேண்டும் என்று இடைக்கால மனு ஒன்றும் டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இடைக்கால மனு மீதான விசாரணை நீதிபதி ரேகா பாலி முன்பு நடைபெற்று வந்தது. டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

அப்போது, இரட்டை இலை சின்னம் குறித்த மேல்முறையீட்டு மனுவின் மீது முடிவு எடுக்கும் வரையில் இடைக்கால நிவாரணமாக தங்கள் அணிக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்றும், மேலும் அகில இந்திய அம்மா அண்ணா திராவிடர் முன்னேற்ற கழகம், எம்.ஜி.ஆர். அம்மா திராவிடர் முன்னேற்ற கழகம், எம்.ஜி.ஆர். அம்மா திராவிடர் கழகம் ஆகிய மூன்று பெயர்களில் ஏதாவது ஒன்றை கட்சி பெயராக வழங்க வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் தரப்பில் நீதிபதி முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன் ஆகியோரும், தேர்தல் கமிஷன் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, சோப்ரா ஆகியோரும் ஆஜராகி வாதாடினார்கள்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த பிப்ரவரி 19-ந் தேதியன்று, இந்த வழக்கின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி ரேகா பாலி நேற்று தனது தீர்ப்பை வழங்கினார். நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

இரு தரப்பு வாதங்களின் அடிப்படையில் மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்கக்கூடியதாக உள்ளது. மனுதாரரின் பிரதான மனுவின் (இரட்டை இலை சின்னம் கோரும் மனு) மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால், மனுதாரர் கோரியுள்ளபடி பிரஷர் குக்கர் சின்னத்தை அவருக்கு ஒதுக்கி தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

மேலும் மனுதாரர் தன்னுடைய அணிக்கு முன்வைக்கும் பெயரை பரிசீலனை செய்து, அவர் கோரும் பெயரை அவரது அணிக்கு ஒதுக்கி உத்தரவிட வேண்டும். சின்னம் ஒதுக்குதல் மற்றும் கட்சி பெயரை அனுமதித்து உத்தரவு பிறப்பித்தல் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் 3 வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு