ஜலந்தர்
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பஸ்தி பாவா கெல் பகுதி சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு மாங்கல்ய தோஷம் காரணமாக நீண்ட நாட்கள் திருமணம் நடக்கவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மிகவும் கவலை அடைந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் ஒரு சாமியாரை சந்தித்தனர்.
இந்த தோஷம் அல்லது குறைபாட்டிலிருந்து விடுபட ஒரு சிறுவனை பொம்மை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.
இதை தொடர்ந்து அந்த ஆசிரியை தன்னிடம் டியூசன் படிக்கும் 13 வயது மாணவன் ஒருவரை தேர்வு செய்து உள்ளார்.
மாணவன் வீட்டிற்கு சென்று சிறுவன் ஒருவாரம் வீட்டில் தங்கி இருந்து படிக்கவேண்டும் என கூறி உள்ளார். அதற்கு சிறுவனது பெற்றோர்களும் சம்மதித்து விட்டனர்.
ஒருவாரம் கழித்து சிறுவன் வீடு திரும்பியதும் ஆசிரியை மாணவனை பொம்மை திருமணம் செய்து கொண்டது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் பஸ்தி பாவா கெல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
ஆசிரியையும் அவரது குடும்ப உறுப்பினர்களும் மெஹந்தி விழா மற்றும் 'முதல் இரவு உள்ளிட்ட திருமண சடங்குகளை வலுக்கட்டாயமாக செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட சடங்குகளை முடித்த பின்னர் ஆசிரியை தனது வளையல்களை உடைத்து விதவையாக அறிவிக்கப்பட்டார். குடும்பத்தினர் இரங்கல் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்து உள்ளனர்.
புகாரை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை போலீஸ் நிலையம் வந்து சமரசம் செய்து உள்ளார். குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் அழுத்தத்தின் பேரில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் புகாரை திரும்பப் பெற்று உள்ளனர்.
பஸ்தி பாவா கெல் போலீஸ் நிலைய ஸ்டேஷன் அதிகாரி ககன்தீப் சிங் சேகோன் போலீசாருக்கு புகார் கிடைத்ததை உறுதிப்படுத்தியுள்ளார், ஆனால் இரு வீட்டாரிடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அது திரும்பப் பெறப்பட்டது.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக கவனித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். சிறுவன் மைனர் என்பதால் அவரை விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும், அவரை சிறையில் அடைப்பது சட்டவிரோதமானது என்றும் டிஎஸ்பி ஜலந்தர் குர்மீத் சிங் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை மற்றும் அவரது பெற்றோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.