தேசிய செய்திகள்

பீகாரை தாக்கும் இரட்டைத்துயரம்: சுட்டெரிக்கும் வெயில் கொடுமை, மூளைக்காய்ச்சலுக்கு 284 பேர் பலி

சுட்டெரிக்கும் வெயில் கொடுமை, மூளைக்காய்ச்சல் என ஒரே நேரத்தில் இரட்டை தாக்குதலுக்கு பீகார் மாநிலம் உள்ளாகி இருக்கிறது. இதில் 284 பேர் பலியாகி விட்டனர்.

தினத்தந்தி

பாட்னா,

நாட்டின் பல மாநிலங்களில், தென்மேற்கு பருவ மழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில் அதற்கு நேர் மாறாக வட மாநிலங்களில் வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது.

வட மாநிலங்களில், குறிப்பாக பீகாரில் வெயிலின் தாக்கம் இயல்பைவிட மிக அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை 184 பேர் பலியாகி உள்ளனர். இதில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 113 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் அதிகபட்சமாக அவுரங்காபாத் மாவட்டத்தில் மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். கயா மாவட்டத்தில் 28 பேர் பலியாகி இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் முதியோர் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பீகாரை கடந்த ஒரு மாதமாக மூளைக்காய்ச்சலும் கடுமையாகத் தாக்கி வருகிறது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது.

பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகளுக்கு முசாபர்பூரில் உள்ள அரசு ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முசாபர்பூரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 66 குழந்தைகள், மூளைக்காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக முசாபர்பூரில் 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் 22-ந்தேதி வரை மூடப்படும் என்றும், மேல்நிலைப் பள்ளிகளில் காலை 10.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த காய்ச்சல் அருகில் உள்ள கயா மாவட்டத்துக்கும் பரவியுள்ளது.

மூளைக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நேரத்தில் வெயில் கொடுமை, மூளைக்காய்ச்சல் என இரட்டை தாக்குதலுக்கு பீகார் உள்ளாகி இருப்பது பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு