மும்பை,
மும்பையின் மேற்கு ரயில்வே பகுதியில் உள்ள உள்ளூர் பயணிகள் ரயிலில் செல்போன்கள் திருடியதற்காக இரண்டு கல்லூரி மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக ரயிலின் பெண்கள் வகுப்பில் செல்போன்களை திருடியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ரயிலின் குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணையின் போது, செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்கள் டுவிங்கிள் சோனி (20) மற்றும் டினால் பார்மர் ஆகியோர் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் தங்கள் காதலனான ஹ்ரிஹி சிங்-கிற்கு செலவழிப்பதற்காகவே இந்தத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் ராஜ்ப்ரோகித் (28) என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த செல்போன் திருட்டு வழக்குகள் போரிவ்லி ரயில் நிலையத்தில் அதிகமாக பதிவானது. மேலும் போரிவ்லி மற்றும் சாண்டகுரூஸ் ரயில்நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவங்கள் அதிக அளவு நிகழ்ந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது இரண்டு கல்லூரி பெண்கள் தங்கள் காதலருக்காக இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்கள் வேகமாக பணம் ஈட்டுவதற்காக இந்த செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக கல்லூரி செல்லும் வழியில் அந்த பெண்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதில் சோனியின் பையில் இருந்து ஒன்பது தொலைபேசிகள் மீட்கப்பட்டன. மேலும் அவர்களிடம் இருந்து மொத்தமாக 38 செல்போன்கள் மற்றும் 30 மெமரி கார்டுகள் மீட்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட அவர்கள் ஜூன் 8-ந் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குறைந்த பட்சம் 7 வழக்குகளில் அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.