பனாஜி,
பா.ஜனதா ஆளும் கோவாவில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
இந்தநிலையில் கோவா மாநில துறைமுகம் மற்றும் கழிவு மேலாண்மைத்துறை மந்திரியாக இருந்த மைக்கேல் லோபோ நேற்று திடீரென தனது மந்திரி பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தார். அத்துடன் பா.ஜனதாவில் இருந்தும் அவர் விலகினார்.
மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா அரசு, மக்களின் ஆதரவை இழந்து விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அவர் விரைவில் காங்கிரசில் சேரக்கூடும் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இதைப்போல பா.ஜனதா எம்.எல்.ஏ. பிரவின் சான்டையும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்து விலகினார். முன்னாள் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவுக்குப்பின் தன்னை கட்சியில் ஓரங்கட்டியதாக அவர் குற்றம் சாட்டினார்.
மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மந்திரி உள்பட 2 எம்.எல்.ஏ.க்கள் விலகியிருப்பது பா.ஜனதாவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அவர்களது விலகல் கட்சியை பாதிக்காது என முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.