மங்களூரு,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள். அவர்கள் கலவரத்துக்கு காரணமானவர்கள் என உளவு பிரிவு போலீசாரின் அறிக்கையை தொடர்ந்து அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிதி உதவியை கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அளிக்க மறுத்து விட்டார்.
இந்த நிலையில் மங்களூரு துப்பாக்கி சூட்டில் பலியான 2 பேரின் குடும்பங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நிதி உதவி அளிக்கப்படும் என அக்கட்சி தலைவர் மம்தாபானர்ஜி அறிவித்தார்.
இதற்கிடையே அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான தினேஷ்திரிவேதி தலைமையிலான குழுவினர் நேற்று பலியான 2 பேரின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதிஉதவியை வழங்கினார்கள். காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களையும் அவர்கள் சந்தித்து தேவையான நிதி உதவியை செய்வோம் என உறுதி அளித்தனர்.