புதுடெல்லி,
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உறுப்பினர்களை மாநில அரசு நியமித்தது. இதில் அமைப்பின் தலைவராக ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தேவதாஸ் நியமிக்கப்பட்டார். மேலும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ராஜாராம் மற்றும் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.ஆறுமுகம் ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்து கடந்த ஏப்ரல் 1-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதில் எம்.ராஜாராம், கே.ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை, எனவே அவர்கள் நியமனத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறி கரூரை சேர்ந்த வக்கீல் ஆர்.ராஜேந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஏப்ரல் 5-ந் தேதி எம்.ராஜாராம், கே.ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்தது.
மதுரை ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும் தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன் ஆகியோர் ஆஜரானார்கள். எதிர்மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சிராஜூதீன், எம்.ராஜாராம் தரப்பில் மூத்த வக்கீல் எஸ்.நந்தகுமார், கே.ஆறுமுகம் தரப்பில் மூத்த வக்கீல் நாகமுத்து ஆகியோர் ஆஜரானார்கள்.
தமிழக அரசு தரப்பில், இந்த நியமனங்களில் எந்த விதிமீறல்களும் கிடையாது. ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ராஜாராம் ஓய்வுபெற்ற பிறகு தான் லோக் ஆயுக்தா தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு, முறைப்படி நியமிக்கப்பட்டார். மற்றொரு உறுப்பினர் கே.ஆறுமுகம் கட்சியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார். இருவரும் பதவியில் இருந்தபோது நியமிக்கப்படவில்லை. தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டுள்ளதால் ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
எதிர்மனுதாரர் ராஜேந்திரன் தரப்பில், இந்த நியமனங்களில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இருவரும் ஆளும் கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள். சட்டத்துறையில் இல்லாத எம்.ராஜாராம் போன்றோரை நியமித்தது தவறானது. தகுதி உள்ள பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று வாதாடப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், தமிழக லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக எம்.ராஜாராம், கே.ஆறுமுகம் ஆகியோரின் நியமனங்கள் மீது மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த இடைக்கால தடை நீக்கப்படுகிறது என்று உத்தரவு பிறப்பித்தனர்.