கோப்பு படம் (பிடிஐ) 
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கடுமையான ஊரடங்கு? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

மராட்டியத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு அமலுக்கு வர வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இன்று அறிவிப்பு வெளியிட உள்ளார்.

மும்பை,

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் 2-வது அலை மாநிலத்தை சிதறடித்து உள்ளது. தினந்தோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கி உள்ளதால், மாநிலத்தில் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நோய் பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 14-ந்தேதி முதல் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருமாறு அரசு உத்தரவிட்டது. ஆனால் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்பார்த்த அளவில் பலன் கிடைக்கவில்லை. மாநிலத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் மாநிலத்தில் வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்க கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதுபற்றி மந்திரி சபையில் ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே கூறுகையில், "மாநிலத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மந்திரிகளும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக முதல்-மந்திரியிடம் வலியுறுத்தினர். எனவே மாநிலம் முழுவதும் கடுமையான ஊரடங்கு தேவை என்பதையே இது உணர்த்துகிறது. கடுமையான ஊரடங்கு குறித்த தகவலை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நாளை(அதாவது இன்று) அறிவிக்கலாம். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவும் மந்திரி சபை முடிவு செய்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.