அகமதாபாத்,
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இங்கிலாந்தில் இருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த போரிஸ் ஜான்சனை குஜராத் முதல்-மந்திரி புபேந்திரபட்டேல், மாநில கவர்னர் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றனர்.
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார். அங்கு சபர்மதி ஆசிரமத்தில் உள்ள பார்வையாளர்கள் கையேட்டில் போரிஸ் ஜான்சன் கையெழுத்திட்டார். அந்த கையேட்டில் அவர், "இந்த அசாதாரண மனிதனின் ஆசிரமத்திற்கு வந்தது ஒரு பெரிய பாக்கியம்.
மேலும் உலகத்தை சிறப்பாக மாற்றுவதற்கு அவர் எவ்வாறு உண்மை மற்றும் அகிம்சை என்னும் எளிய கொள்கைகளை கொண்டு அணிதிரட்டினார் என்பதைப் புரிந்துகொள்வது ஒரு மகத்தான பாக்கியம்" என்று எழுதி அவர் கையெழுத்திட்டார்.