புதுடெல்லி,
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் ஆகியவற்றின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட கூட்டம், இன்று தேசிய சுகாதார ஆணையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கலந்து கொண்டார்.
இந்த ஆய்வு கூட்டத்தின் போது அரசின் முக்கிய சுகாதார திட்டங்களை முழுமையாக ஆய்வு செய்த அமைச்சர், இவற்றின் சிறப்பம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் உரையாடினார். அப்போது பேசிய அவர், நாட்டின் 130 கோடி மக்களுக்கும், அவர்கள் எங்கிருந்தாலும், எப்போது தேவை ஏற்பட்டாலும், சரியான நேரத்தில், குறைந்த செலவில், பாதுகாப்பான மருத்துவச் சேவைகளை அளிப்பதே அரசின் நோக்கம் என்று தெரிவித்தார்.
இதற்காகத் தான் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டதாக ஹர்ஷவர்தன் கூறினார். மேலும் தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தின் மூலம் சுகாதரத்துறையை டிஜிட்டல் மயமாக்குவதால் நோயாளிகள், மருத்துவர்கள், சிகிச்சைகள், மருத்துவ வசதிகள் குறித்த தகவல்கள் முறைப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.