புதுடெல்லி,
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபை கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்திற்கு பின்னர் மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுகாதாரத்துறையை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகள் இல்லாத இடங்களில் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. 300 படுக்கை வசதிகள் கொண்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளுடன் இந்த மருத்துவ கல்லூரிகள் இணைக்கப்படும்.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 15 ஆயிரத்து 700 மருத்துவ இடங்கள் கிடைக்கும். ஏற்கனவே 58 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு 39 கல்லூரிகள் தொடங்கப்பட்டு செயல்படுகின்றன. அடுத்த கல்வியாண்டில் (2020-21) 19 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்.
உள்நாட்டு தேவைக்கு போக மீதியுள்ள 60 லட்சம் டன் சர்க்கரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ரூ.6,260 கோடி மானியம் வழங்கப்படும். இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
நிலக்கரி சுரங்கம் மற்றும் அதுதொடர்பான பணிகளுக்கு 100 சதவீத அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும். மின்னணு ஊடகத்துறையிலும் 26 சதவீத அன்னிய முதலீடுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே மந்திரி சபை கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கமாக எடுத்து கூறினார்.
மேலும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றியும் பேசினார்.