செண்ட் பீட்டர்ஸ்பர்க்
நேற்று ரஷ்யாவும், இந்தியாவும் கையொப்பமிட்ட ஒப்பந்தப்படி புதிதாக அமையவுள்ள ஈனுலைகளுக்கு இந்தியாவும், ரஷ்யாவும் செலவை சரிபாதியாக பகிர்ந்துக் கொள்ளும். ரஷ்யா தனது பங்கை கடனாக கொடுக்கிறது. இரண்டில் முதலாவது யூனிட் 66 மாதங்களிலும், இரண்டாவது 72 மாதங்களிலும் தயாராகும். ரஷ்யா தனது பங்கில் 70 சதவீதத்தை கடனாகவும் மீதமுள்ள 30 சதவீதத்தை பங்கு மூலதனமாகவும் தரும். ரஷ்யா 4.2 அமெரிக்க டாலர்களை கட்டுமான செலவுகளுக்காக தரும்.
ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் பேசிய ரஷ்ய அதிபர் புடின், ரஷ்யா குறைந்தது 12 அலகுகளை அமைக்கவுள்ளது. ஈனுலைகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பேரளவில் உதவும் என்றார்.
கூடங்குளம் அணு உலைகளை அமைப்பதற்கான முதல் ஒப்பந்தம் 1988 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவின் பெரிய அணு உலைக்கூடமாக கூடங்குளம் விளங்கும். இங்குள்ள ஆறு யூனிட்களையும் சேர்த்து 6,000 மெகாவாட் உற்பத்தி (தலா 1,000 மெகாவாட்) நடைபெறும் என்று தெரிகிறது.
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை தற்போது ரூ. 4.29 ஆக சொல்லப்படுகிறது. மூன்றாவது மற்றும் நான்காவது உலைகளின் மின்சாரத்திற்கான விலை இதைவிட கூடுதலாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்தியாவிலுள்ள 22 அணு உலைகளின் மூலம் 6780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகும் நிலையில் கூடங்குளத்தில் மட்டும் 6,000 மெகாவாட் கூடுதலாக உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
முதல் இரண்டு உலைகளை அமைக்க ரூ. 17.270 கோடிகள் செலவாயின. அடுத்ததாக 3, 4 ஆம் உலைகள் அமைக்க ரூ. 39,747 கோடி செலவிடப்படும். இதற்கான கட்டுமானப் பணிகள் சென்ற ஆண்டு துவங்கின. தற்போது 5, 6 உலைகளுக்கு ரூ. 50,000 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது உலைகள் 2022-23 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.