லக்னோ,
உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் 17 வயது சிறுமியாக இருந்தபோது பாங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார், கடந்த 2017-ம் ஆண்டில் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தார் என உள்ளூர் போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், அந்த இளம்பெண்ணின் தந்தை கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக உ.பி. போலீசாரால் கடந்த 2-4-2018 அன்று கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை காவலில் இருந்த அவர் 9-4-2018 அன்று சிறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், உன்னாவ் பெண் பாலியல் பலாத்காரம். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்பு ஆகிய குற்றங்களில் குல்தீப் சிங் செங்கார் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது.
குல்தீப் சிங் செங்கார் 2017-ம் ஆண்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், அந்த இளம்பெண்ணின் தந்தை சிறையில் உயிரிழந்த சம்பவத்தில் 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து டெல்லி கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த டிசம்பர் 23-ந்தேதி செங்காருக்கு, டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. எனினும், கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த உத்தரவுக்கு டிசம்பர் 29-ந்தேதி இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், உன்னாவ் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட செங்கார், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை மரண வழக்கில் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.