தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்: யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா முழு பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெறும் என முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

300 இடங்கள் கிடைக்கும்

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை சட்டசபை தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதில் ஒட்டுமொத்த நாட்டின் கவனமும் உத்தரபிரதேசத்தை நோக்கியே உள்ளன.

பா.ஜனதா ஆட்சி நடைபெறும் அங்கு மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.

தேர்தல் அட்டவணையை வரவேற்று தனது டுவிட்டர் தளத்தில் அவர், ஜனநாயக பண்டிகையை நாங்கள் வரவேற்கிறோம். மக்களின் ஆசீர்வாதத்தாலும், இரட்டை என்ஜின் அரசுகளின் சாதனைகளின் அடிப்படையிலும் மாநிலத்தில் முழு பெரும்பான்மையுடன் பா.ஜனதா மீண்டும் ஆட்சியமைக்கும் என குறிப்பிட்டு உள்ளர்.

இதைப்போல லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, மாநிலத்தில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று கூறிய அவர், பா.ஜனதாவுக்கு 80 சதவீத வாக்குகளும், எதிர்க்கட்சிகளுக்கு 20 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

அகிலேஷ் யாதவ் கருத்து

சமாஜ்வாடி தலைவரும், மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவும் தேர்தல் அறிவிப்பை வரவேற்று இருப்பதுடன், மாநிலத்தில் பா.ஜனதா அரசின் கவுண்ட்டவுன் தொடங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், உத்தரபிரதேச மக்களுக்கு மாற்றம் தேவை. இது மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பிப்ரவரி 10-ந்தேதியுடன் தொடங்குகிறது. இந்த மாற்றத்துக்காக மக்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். அது தற்போது வந்துள்ளது என்று தெரிவித்தார்.

மாயாவதி வலியுறுத்தல்

தேர்தல் தேதியை வரவேற்றுள்ள மற்றொரு முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி, ஆளும் பா.ஜனதாவின் விதி மீறல்களை தேர்தல் கமிஷன் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கூறியுள்ள மாயாவதி, மாநிலத்தில் சுதந்திரமான, சுமுகமான, நேர்மையான முறையில் தேர்தல் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார்.

ஆம் ஆத்மி தயார்

இதற்கிடையே உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் போட்டியிட தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆம் ஆத்மி தயாராக உள்ளது என குறிப்பிட்டு உள்ளார். மணிப்பூரை தவிர மீதமுள்ள 4 மாநிலங்களிலும் ஆம் ஆத்மி போட்டியிட முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து