புதுடெல்லி,
ஷகாரன்பூர் ரெயில் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படும் என லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் பெயரில் வடக்கு ரெயில்வேக்கு மிரட்டல் கடிதம் வந்து உள்ளது. புதன்கிழமை (இன்று) பல்வேறு ரெயில் நிலையங்கள் மற்றும், இரண்டு மத வழிப்பாட்டு தளங்களில் தாக்குதல்கள் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து அங்கு கோவில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பை அம்மாநில போலீஸ் உஷார் படுத்தி உள்ளது. மும்பை தாக்குதலை நடத்திய பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர் மவுனாலா அபு ஷெயிக் பெயரில் ஜூன் 1-ம் தேதி வடக்கு ரெயில்வேக்கு மிரட்டல் கடிதம் வந்து உள்ளது.
ஷகாரன்பூர், ஹப்பூர் மற்றும் பிற ரெயில் நிலையங்களை பயங்கரவாதிகள் இலக்கு ஆக்கலாம் என போலீஸ் உஷார் படுத்தப்பட்டது. இதேபோன்று காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், மதுராவில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 8 மற்றும் 10-ம் தேதிக்குள் பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுக்கலாம் என்ற எச்சரிக்கையுடன் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. டெல்லி போலீசுக்கும் மிரட்டல் கடிதம் தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.