தேசிய செய்திகள்

மராட்டிய சட்டசபையில் அமளி; பா.ஜ.க. வெளிநடப்பு

மராட்டிய சட்டசபையில் ஏற்பட்ட அமளியை அடுத்து பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா இடையே முதல்-மந்திரி பதவியை பங்கிடும் பிரச்சினையில் மோதல் வெடித்ததால் அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

பின்னர் அடுத்தடுத்து நடந்த அரசியல் குழப்பங்களால் கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி அதிகாலை திடீரென ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவாரை தன்பக்கம் இழுத்து அன்று காலை வேளையில் பாரதீய ஜனதா திடீரென்று ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்-மந்திரியாக அஜித்பவாரும் பதவி ஏற்றனர். பின்னர் நடந்த எதிர்பாராத திருப்பமாக அஜித்பவார் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சிக்கு திரும்பியதால், பதவி ஏற்ற 4 நாட்களிலேயே தேவேந்திர பட்னாவிஸ் அரசு கவிழ்ந்தது.

இதையடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் முன்னணி என்ற தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி ஆட்சியை பிடித்தது. இந்த அரசின் முதல்-மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவருடன் 3 கட்சிகளை சேர்ந்த 6 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி வருகிற 3ந்தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மெஜாரிட்டியை நிரூபிக்க இன்னும் கால அவகாசம் இருந்தாலும், உடனடியாக சட்டசபையில் பலப்பரீட்சை நடத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முடிவு செய்தார். இதனால் பதவி ஏற்ற அன்றே இரவில் மந்திரி சபையை கூட்டிய போது மெஜாரிட்டியை நிரூபிப்பது குறித்து அவர் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் சட்டசபை இன்று கூடுவதாகவும், இதில் பிற்பகல் வேளையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மராட்டிய சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மதியம் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

இதனை அடுத்து அவையில் இருந்து பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.

இந்த கூட்டத்தொடர் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மற்றும் சட்டவிரோதம் ஆனது. தற்காலிக சபாநாயகரை நியமனம் செய்ததும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு