புதுடெல்லி,
டெல்லி மேல்சபையில், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்படுகிற வன்கொடுமைகள் பற்றி இன்று விவாதம் நடைபெற்ற போது, இந்த விவாதத்தில் பேசிய சமாஜ்வாடி கட்சி எம்.பி., நரேஷ் அகர்வால், அப்போது அவர் இந்து கடவுள்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தெரிவித்தார். நரேஷ் அகர்வாலின் சர்ச்சை கருத்துக்கு எதிராக பாஜக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
சபையின் முன்னவரான நிதி மந்திரி அருண் ஜெட்லி, அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், நரேஷ் அகர்வால் தெரிவித்த கருத்தை, சபைக்கு வெளியே பேசி இருந்தால், அவர் மீது வழக்கு தொடர்ந்திருக்க முடியும் என குறிப்பிட்டார்.
பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த் குமார், அவர் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த முடியாது என கூறி, அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக சபை, 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியில் அவர், எனது பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால், அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என கூறினார். பின்னர் அவர் கூறிய கருத்தின் ஒரு பகுதியை சபைக்குறிப்பில் இருந்து துணைத்தலைவர் பி.ஜே. குரியன் நீக்கி உத்தரவிட்டார்.