தேசிய செய்திகள்

கேரள கல்வி மந்திரி பதவி விலக வலியுறுத்தல்; காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

கேரளாவில் தங்க கடத்தல் விவகாரத்தில் கல்வி மந்திரி பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

திருவனந்தபுரம்,

ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த கடத்தலுக்கு பின்னணியாக தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் செயல்பட்டுள்ளார் என்பது விசாரணையில் வெளிவந்தது. பின்னர் அவர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் பெயரும் அடிபட்டுள்ளது. இதனால் தற்போது அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை ரூ.100 கோடி தங்கம் கடத்தப்பட்டு இருக்க கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஸ்வப்னா சுரேஷ், திரிச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்தநிலையில் கேரள உயர்கல்வி மந்திரி கே.டி.ஜலீலிடம், தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அரசின் நெறிமுறை விதிகளை மீறி துபாயில் இருந்து தூதரக பார்சல்கள் மூலமாக மத சார்புள்ள நூல்களை அனுப்பியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அமலாக்க பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரான மந்திரி ஜலீல் பதவி விலக கோரி தொடர்ந்து கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கேரள அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அளவுக்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தனித்தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, கேரள காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கொச்சி நகரில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்திற்கு முன் இன்று ஒன்று திரண்டு, கேரள உயர்கல்வி மந்திரி கே.டி. ஜலீல் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். எனினும், தொடர்ந்து போராட்டக்காரர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்