புதுடெல்லி,
உலகம் முழுவதும் ஓராண்டுக்கும் மேலாகப் பெரும் சவாலாக இருக்கும் கொரோனா தொற்றைச் சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.
அந்தவகையில் இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் இரண்டு தவணைகளாக வழங்கப்படக் கூடிய தடுப்பூசிகள். முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்.
உலக அளவில் பயன்பாட்டில் இருக்கும் பைசர், மாடர்னா, ஸ்புட்னிக்-5 போன்ற இன்னும் பல தடுப்பூசிகளும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளே. இதில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ளது மட்டும் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி ஆகும். இந்தத் தடுப்பூசிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தாரின் தடுப்பூசியை கூட்டாக தயாரிக்க அமெரிக்கா விருப்பம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பு அதிகாரி டேனியல் பி. சுமித் நிருபர்களிடம் பேசுகையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க எவ்வாறு உதவுவது என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம். உலகளவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது. நாங்கள் இந்திய சீரம் நிறுவனம் மற்றும் பிற இடங்களில் உற்பத்தி நிலைகளை கவனமாக கவனித்து வருகிறோம். நாங்கள் என்ன மூலப்பொருட்களை வழங்க முடியும் என்பதைத் தீர்மானிக்க இந்திய சீரம் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம். மேலும் உற்பத்தியை அதிகரிக்க தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம் என்று அவர் கூறினார்.