பிரயாக்ராஜ்,
நாடு முழுவதும் உச்சமடைந்து வரும் கொரோனா பாதிப்புகளில் உத்தர பிரதேசமும் பாதிக்கப்பட்டு உள்ளது. 4,689 பேருக்கு நேற்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. 27,509 பேர் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 பேர் பலியான நிலையில், இதுவரை 8,924 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தொடர்ந்து சமீப நாட்களாக தொற்று அதிகரித்து வரும் சூழலில், உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இன்றிரவு முதல் ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, இன்றிரவு 10 மணி தொடங்கி காலை 8 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். அடுத்த உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட மாஜிஸ்திரேட் அறிவித்து உள்ளார். எனினும், இந்த ஊரடங்கில் இருந்து அத்தியாவசிய சேவைகள் விலக்களிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, உத்தர பிரதேச தலைநகர் லக்னோ, கான்பூர் மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களிலும் இன்றிரவு முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.