புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்துவதற்காக 3 தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
அவை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கும் கோவேக்சின், ஜைடஸ் கேடிலா நிறுவனம் தயாரிக்கும் ஜைகோவ்-டி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி இந்தியாவில் புனே நகரில் உள்ள இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் தயாரிக்க உள்ள கோவிஷீல்டு ஆகிய 3 தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சோதனைகள் வெற்றி பெறுகிற நிலையில் அவற்றின் உற்பத்தி தொடங்கி, இந்தியாவில் பொதுமக்களுக்கு கிடைக்க தொடங்கும். அந்த நாளைத்தான் நாடு ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த சுதந்திர தினவிழாவின் இடையே மத்திய சுகாதார ராஜாங்க மந்திரி அஷ்வினி குமார் சவுபே நிருபர்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது அவர் மத்திய அரசு தரப்பில் தடுப்பூசி பற்றி கூறுகையில், கொரோனாவுக்கு தடுப்பூசியை கொண்டு வருவதில் நமது விஞ்ஞானிகள் கடினமாக உழைத்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான 3 தடுப்பூசிகள் வெவ்வேறு கட்ட சோதனையில் உள்ளன. நாம் அதில் வெற்றி பெற்று விட்டால், கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் முன்கள பணியாளர்களுக்கு முதலில் போடப்படும் என குறிப்பிட்டார்.
எனவே தடுப்பூசி வந்த உடன் முதலில் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார சார்பு பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு முதலில் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.