புதுடெல்லி,
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தடுப்பூசி அனைவருக்கும் சம உரிமையுடன் கிடைக்க வேண்டும். ஆதரவற்றோர், பிச்சைக்காரர்கள், நிலையான இருப்பிடம் இல்லாமல் இடம்பெயர்பவர்கள் ஆகியோர் மீது சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் ஆன்லைனில் பதிவு செய்வது இயலாத காரியம். அவர்களிடம் உரிய ஆவணங்களும் இருக்காது.
இவர்களுக்காக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து தடுப்பூசி செலுத்துமாறு வலியுறுத்துகிறோம். இதற்காக தொண்டு நிறுவனங்கள், சேவை மனப்பான்மையுள்ள தன்னார்வலர்கள் ஆகியோரின் உதவியை கேட்டுப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.