புதுடெல்லி,
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என தெரிவித்து அந்த சட்டத்தை சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 1-ந் தேதி ரத்து செய்து தீர்ப்பு கூறியது.
இந்தநிலையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தமிழக சட்டத்துறை மற்றும் உயர்கல்வித்துறை ஆகியவற்றின் சார்பில் வக்கீல் டி.குமணன் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக 3 மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே தமிழக அரசு சார்பிலும், பா.ம.க. சார்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பது நினைவுகூரத்தக்கது.
இதற்கிடையே மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் பட்சத்தில் தங்களது தரப்பு வாதங்களையும் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என தெரிவித்து இதுவரை 15 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.