தேசிய செய்திகள்

டெல்லியில் வாகன போக்குவரத்து மாற்றம்; போலீசார் அறிவிப்பு வெளியீடு

டெல்லியில் வாகன போக்குவரத்து மாற்றம் பற்றி டெல்லி போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த சூழலில், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்தது.

எனினும், போலீசார் அனுமதித்த நேரம், தடம் ஆகியவற்றை மீறி தடுப்பான்களை உடைத்து, டிராக்டர்களால் முட்டி, மோதி டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகளில் ஒரு தரப்பினர் டெல்லிக்குள் டெல்லி நகரத்திற்குள் நுழைந்தனர்.

இதனால் வன்முறையை கட்டுப்படுத்தவும், கும்பலை கலைக்கவும் போலீசார் தடியடி நடத்தினர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் டாங்கிகளை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் அவர்களின் டிராக்டர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அவர்களை விரட்டினர்.

இருந்தபோதிலும் போலீசாரின் தடுப்புகளை கடந்த விவசாயிகள், டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு செங்கோட்டையின் முன் டிராக்டர்களை நிறுத்தியும், தேசிய கொடி கம்பத்தின் அருகே திரண்டு கோஷங்களையும் எழுப்பினர். பின்னர், விவசாயிகள் மத கொடி ஒன்றை செங்கோட்டையில் ஏற்றினர்.

டெல்லியில் டிராக்டர் பேரணியில், விவசாயிகள் கடுமையாக தாக்கியதில் 83 போலீசார் காயம் அடைந்து உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். கிழக்கு டெல்லி பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதற்காக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 8 பேருந்துகள் மற்றும் 17 தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டது. 19 பேர் கைது செய்யப்பட்டு, 25 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.

இதனால், டெல்லி தொடர்ந்து பதற்றத்துடனேயே காணப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் பேரணி முடிந்து தங்களது பழைய போராட்ட பகுதிகளுக்கு விவசாயிகள் திரும்பினர். தொடர் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். இன்று காலை மீண்டும் திக்ரி மற்றும் சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்த போராட்டத்தினால், போக்குவரத்துக்கு ஏற்படும் இடையூறுகளை களைய, டெல்லியில் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி டெல்லி போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

இதன்படி, சிங்கு, ஆச்சண்டி, மங்கேஷ், சபோலி, பியாவ் மணியாரி ஆகிய எல்லைகள் மூடப்படுகின்றன. லாம்பூர், சபியாபாத், சிங்கு பள்ளிக்கூடம் மற்றும் பல்லா சுங்க சாவடி எல்லை பகுதிகள் திறந்திருக்கும்.

நரேலா பகுதியருகே தேசிய நெடுஞ்சாலை எண் 44 பகுதியில் இருந்து போக்குவரத்து மாற்றி விடப்பட்டு உள்ளது. வெளிவட்ட சாலை பகுதிகள், ஜி.டி.கே. சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 44 ஆகிய பகுதிகளை தவிர்க்கும்படி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

காசிப்பூர் எல்லை மூடப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை எண் 24 மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 9 ஆகியவற்றின் போக்குவரத்து வேறு பகுதிகளில் திருப்பி விடப்பட்டு உள்ளது. சாலை எண் 56, 57ஏ, கொண்டிலி, பேப்பர் மார்க்கெட், டெல்கோ டி பாயிண்ட், இ.டி.எம். மால், அக்ஷர்தாம் மற்றும் நிஜாமுதீன் கட்டா ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றி விடப்படுகிறது.

இந்த பகுதிகளிலும் மற்றும் விகாஸ் மார்க் பகுதியிலும் வாகன போக்குவரத்து கடும் நெருக்கடியாக காணப்படுகிறது என டெல்லி போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து