திருவனந்தபுரம்,
சபரிமலையில் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் மேற்கொள்கிறார்கள். கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியின் போது பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இடதுசாரி அரசு ஆதரவுகரம் நீட்டியுள்ளது. மலைக்கு போலீஸ், பெண்களை பாதுகாப்புடன் அழைத்து சென்றாலும் பக்தர்கள் போராட்டம் காரணமாக அதில் வெற்றிகிடையாது. நூற்றாண்டுக்கால பாரம்பரியத்தை மீறக்கூடாது என பக்தர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டு அனுமதிக்கு எதிராக 25-க்கும் அதிகமான மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவின் சதிதிட்டம் உள்ளது என பினராயி விஜயன் அரசு குற்றம் சாட்டுகிறது. 2 வருடங்களுக்கு முன்னர் பெண்கள் அனுமதிக்கு பா.ஜனதா ஆதரவு அளித்தது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் போது வரவேற்பு தெரிவித்தது. இப்போது மட்டும் போராடுவது ஏன்? என கேள்வி எழுப்படுகிறது. மறுபுறம் ஏன் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு இதில் அவசரச்சட்டத்தை கொண்டுவரக்கூடாது? என காங்கிரஸ் கேள்வியை எழுப்புகிறது. பா.ஜனதா பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மேற்கொள்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி பேசுகையில், சபரிமலையில் இப்போது எழுந்துள்ள சூழ்நிலையை, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னதாக இருந்த நிலையுடன் ஒப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால், தென்னிந்தியாவின் அயோத்திதான் சபரிமலை கோவில் என்று கூறியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள வினோத் பன்சால், சபரிமலையை, அயோத்தியுடன் ஒப்பிட்டு சீதாராம் யெச்சூரியே பேசிவிட்டார். நல்லது, உண்மையில் சபரிமலை தென்னிந்தியாவின் அயோத்திதான். சபரிமலையின் புனிதம், மத நம்பிக்கை, பண்பாடு மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் அரசின் உண்மையான முகத்தை காட்டுகிறது. கேரளாவில் கன்னியாஸ்திரிகள் பாதிக்கப்பட்டுள்ளதில் குருடாகவும், அலட்சியத்துடன் இருந்து வரும் அரசு, திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர்களாக இந்துக்கள் அல்லாதவர்களை நியமனம் செய்கிறது. கோவிலின் புனிதத்திற்காக போராடும் பக்தர்களை பாராட்டுகிறேன், என கூறியுள்ளார்.