ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் லஷ்கர் இ தைபா தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, அப்பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் அந்த இயக்கத்தின் தளபதி நவீத் ஜாட் உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ரைசிங் காஷ்மீர் என்ற நாளிதழின் ஆசிரியரான சுஜாத் புகாரியை சுட்டு கொன்றதில் ஜாட் தொடர்புடையவர்.
இந்த நிலையில், காஷ்மீரில் என்கவுன்ட்டர் முடிந்த பின் சேதமடைந்த வீடு ஒன்றில் இருந்து தீவிரவாதி தப்பி ஓடிய வீடியோ முகநூல் மற்றும் பிற சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இதில், இளைஞர்கள் சேதமடைந்த வீட்டு வளாகத்தில் சுற்றி நின்று கொண்டு, அதில் இருந்த ஆயுதமேந்திய தீவிரவாதி தப்பி ஓடுவதற்கு உதவி செய்கின்றனர். எனினும், இது பழைய வீடியோவா அல்லது துப்பாக்கி சண்டை நடந்த இடத்தில் இருந்து வெளியான வீடியோவா என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.