அகமதாபாத்,
குஜராத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா கட்சி மாநிலத்தில் ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது. இதைத்தொடர்ந்து புதிய முதல்மந்திரியை தேர்வு செய்வதற்காக கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் கடந்த 22ந்தேதி நடந்தது. இதில் முதல்மந்திரியாக விஜய் ரூபானியும், துணை முதல்மந்திரியாக நிதின் பட்டேலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் மறுநாள் மாநில கவர்னர் ஓ.பி.கோலியை சந்தித்த பா.ஜனதா தலைவர்கள், மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர். அதை ஏற்று, புதிய அரசை அமைக்குமாறு கவர்னரும் அழைப்பு விடுத்தார். அதன்படி குஜராத்தில் புதிய அரசு இன்று பதவியேற்றது.
மாநில தலைமை செயலகம் அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தேசியத்தலைவர் அமித்ஷா, பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.