கொல்கத்தா,
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து காரணமாக காலில் காயம் ஏற்பட்ட மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சர்கர நாற்காலியில் அமர்ந்தபடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேவேளை பாஜக-வை சேர்ந்த முக்கிய தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேற்குவங்காளத்தின் ராணிபந்த் பகுதியில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தின் போது பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா கூறியதாவது,
நான் பயணித்த ஹெலிகாப்டரில் ஏற்பட்ட சிறு இயந்திர கோளாறு காரணமாக இந்த கூட்டத்திற்கு வர எனக்கு சிறிது காலதாமதம் ஏற்பட்டது. ஆனால், நான் இதை எனக்கு எதிராக நடத்தப்பட்ட சதி திட்டம் என கூறமாட்டேன்.
மம்தா பானர்ஜிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயம் அவருக்கு எவ்வாறு ஏற்பட்டது என தெரியவில்லை. அதை மம்தா மீது நடத்தப்பட்ட திட்டப்பட்ட சதி திட்டம் என திரிணாமுல் காங்கிரஸ் கூறுகிறது. ஆனால், அது ஒரு விபத்து என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மம்தா பானர்ஜி, நீங்கள் உங்கள் கால் மீது அக்கரை கொண்டு சர்கர நாற்காலியில் பயணிக்கிறீர்கள். ஆனால், கொல்லப்பட்ட எனது கட்சி தொண்டர்கள் 130 பேரின் தாயாரின் வலி மீது உங்களுக்கு அக்கரை இல்லை.
தாய், தாய் மண், மக்கள் ஆகியவற்கிற்காக செயல்படுவோம் என்ற கொள்கைகளுக்காகவும், அரசியல் வன்முறைகளுக்கு முடிவுகட்டவும் மக்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களித்தனர்.
ஆனால், மக்கள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக தற்போது நடைபெற்று வருகிறது. வன்முறை, ஊழல் மேற்குவங்காளத்தில் அதிகரித்துள்ளது. சான்றிதழ்கள் பெற பழங்குடி மக்கள் ரூ.100 கொடுக்க வேண்டியுள்ளது. பாஜக-வை ஆட்சிக்கு கொண்டுவாருங்கள். சான்றிதழ்களுகாக பழங்குடி மக்கள் யாரும் பணம் செலுத்த வேண்டியதில்லை.
என்றார்.