கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலம் தினாஜோர் மாவட்டத்தில் பள்ளிக்கூடத்தில் உருது மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 மாணவர்கள் இறந்தனர். இதனை கண்டித்து மேற்குவங்காளத்தில் முழுஅடைப்பு போராட்டத்திற்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்திருந்தது.
இருப்பினும் மாநில அரசின் நடவடிக்கையால் பெரும்பாலான வணிக நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் செயல்பட்டன. பஸ் போக்குவரத்தும் நடந்தது. ஆனால் சில இடங்களில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாம்பூர் என்ற இடத்தில் முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. 3 பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பல பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. சில இடங்களில் ரெயில் போக்குவரத்தும் தடைபட்டது.
இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இஸ்லாம்பூரில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்தும் களைத்தனர். தினாஜ்பூர் மாவட்டத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.