தேசிய செய்திகள்

‘இரண்டு இந்தியா’ - மேடை காமெடியன் வீர் தாஸ் கருத்து; பா.ஜ.க எதிர்ப்பு!

தாஸ் அவருடைய முழு வீடியோவில் இருந்து, 6 நிமிட யூடியூப் வீடியோ கிளிப்பிங்கை வெளியிட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மேடை காமெடியன் வீர் தாஸ் உலக அளவில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த பார்வையாளர்கள் வீற்றிருக்கும் நகைச்சுவை அரட்டை அரங்கத்தில் சமீபத்தில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதன் வீடியோ வெளியாகி பரபரப்பாகி உள்ளது.

தாஸ் அவருடைய முழு வீடியோவில் இருந்து, 6 நிமிட யூடியூப் வீடியோ கிளிப்பிங்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நாட்டின் இரு வேறு நிலைப்பாடு குறித்து பேசியுள்ளார். அதனுடன் சேர்த்து நாட்டின் முக்கிய பிரச்சினைகள், கொரோனாவை எதிர்த்து போராடிய விதம், பாலியல் வன்கொடுமைகள், விவசாயிகள் மற்றும் நகைச்சுவை பேச்சாளர்களின் மீது உள்ள அடக்குமுறை போன்ற விஷயங்களையும் பேசியுள்ளார்.

இந்த சர்ச்சை வீடியோ தொடர்பாக பாஜகவை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஆதித்யா ஜா புகார் அளித்துள்ளார். அதில், நடிகரும் நகைச்சுவை பேச்சாளருமான வீர் தாஸ் சர்ச்சைக்குரிய விதத்தில் இந்தியா குறித்து பேசியுள்ளார். இந்தியர்கள் பகலில் பெண்களை வணங்குவார்கள். ஆனால், இரவில் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவார்கள் என்று பேசியுள்ளார். இதுபோன்ற இழிவான கூற்றுகளை அவர் சர்வதேச அரங்கில் பேசி பெண்களையும் நாட்டையும் இழிவுபடுத்தியுள்ளார் என்று ஆதித்யா ஜா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் துணை ஆணையர் தீபக் யாதவ் கூறுகையில், தற்போதைக்கு புகார் பெறப்பட்டுள்ளது என்றும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மேடை காமெடியன் வீர் தாசுக்கு ஆதரவு பெருகி உள்ளது. முன்னதாக சசி தரூர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது காங்கிரசின் மூத்த தலைவர் கபில் சிபல் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, வீர் தாஸ், இரண்டு இந்தியா உள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. உலகத்திற்கு அதை பற்றி ஒரு இந்தியர் சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை. நாம் சகிப்புத்தன்மை அற்றவர்களாகவும் பாசாங்குத்தனமாகவும் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு