புதுடெல்லி,
தலைநகர் டெல்லி வழக்கம் போல் இந்த ஆண்டும் கடுமையான காற்று மாசால் திண்டாடுகிறது. டெல்லியில் நிலவும் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. சமீப காலத்தில் இந்த அளவுக்கு டெல்லியில் காற்று மாசுபட்டு தரம் குறைந்திருப்பது இதுவே முதல்முறை என தகவல்கள் கூறுகின்றன.
இதன் காரணமாக வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு ஊதுபத்தி கொளுத்துவதும் காற்று மாசை ஏற்படுத்தும் என கூறி அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வேளையில், இந்தியா கேட் பகுதியில் பனியுடன் சேர்ந்து புகை படலமாக எங்கும் காட்சி அளித்தது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே சென்றன. நடைபயிற்சி சென்றவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகையே டெல்லி காற்று மாசுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சுற்றுச் சூழல் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் புரே லால் கூறுகையில், டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரம் அடையாது என்று நம்புவோம். ஆனால் நிலைமை மோசமாகி விட்டால் தனியார் வாகனங்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தார். அதே நேரத்தில் தீபாவளி சமயத்தின்போது பட்டாசுகளை வெடிப்பதால் அன்றைக்கு நிலைமை இன்னும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.