தேசிய செய்திகள்

கொரோனாவால் தபால் ஓட்டு போடும் வயது வரம்பு குறைப்பு- தேர்தல் கமிஷன் அதிரடி

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் தபால் ஓட்டு போடும் வயது வரம்பை குறைத்து தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று அக்டோபர், நவம்பரில் உச்சத்தை அடையும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதற்கு மத்தியில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம், பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிற பீகார் மாநில சட்டசபையின் ஆயுள்காலம் நவம்பர் மாத் 29-ந் தேதி முடிகிறது. அங்கு அக்டோபர் கடைசியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு பின்னர் நடக்கிற முதல் சட்டசபை தேர்தலாக இது அமையும். இந்த தேர்தலில் முதல் முறையாக 65 வயது ஆனவர்களும் தபால் ஓட்டு போட வழி பிறந்துள்ளது.

இந்தியாவில் பொதுவாக ஆயுத படையினர், போலீஸ் படையினர், தேர்தல் பணி ஆற்றுகிற அரசு துறையினர் மட்டுமே தபால் ஓட்டு போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர்களுடன் மாற்றுதிறனாளிகள் மற்றும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரும் தபால் ஓட்டு போட அனுமதி அளித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தேர்தல் விதிகளில் மத்திய சட்ட அமைச்சகம் திருத்தம் செய்தது.

தற்போது கொரோனா வைரஸ், முதியோருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதால், அவர்கள் ஓட்டுச்சாவடிக்கு வராமல் தபால் ஓட்டு போடுவதற்கு ஏதுவாக 80 வயது என்ற வரம்பு 65 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் பீகார் சட்டசபை தேர்தலில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரும் தபால் ஓட்டு போட வழி பிறந்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களும், தொற்று தாக்குதலின் சந்தேகத்துக்கு ஆளானோரும் தபால் ஓட்டு போட வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடந்த 19-ந் தேதி ஒப்புதல் அளித்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தபால் ஓட்டு போட விரும்புகிற மேலே குறிப்பிட்ட பிரிவினர், 12-டி என்ற பாரத்தை நிரப்பி அளிக்க வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்