புதுடெல்லி,
மிக மிக முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்காக ரூ.3,600 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள் வாங்க செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் லஞ்சம் கைமாறியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதில், இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மிசெல், துபாயில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு கடந்த 4ந்தேதி நாடு கடத்தப்பட்டார்.
அவரை அடுத்த நாள் நீதிமன்றம் முன் சி.பி.ஐ. ஆஜர் செய்தது. இதில் மிசெல்லை 5 நாள் விசாரணை காவலுக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்பின் இந்த காவல் 5 நாட்களுக்கும், அதன்பின்னர் 4 நாட்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இவர் ரூ.225 கோடி லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரிய மிசெலின் ஜாமீன் மனு மீது விசாரணை மேற்கொண்ட சிறப்பு நீதிபதி அரவிந்த குமார் அதனை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டார்.
இதற்கு முன்பு அமலாக்க துறையானது பணபரிமாற்ற மோசடி வழக்கொன்றில் மிசெல்லை இன்று கைது செய்து 15 நாள் காவலில் அனுப்ப கோரிக்கை வைத்தது. இந்நிலையில், மிசெலை அமலாக்க துறையானது 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.