புதுடெல்லி,
1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். நேற்று அதன் 43-வது நினைவு தினம் ஆகும். இது கருப்பு நாளாக பா.ஜனதாவால் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி நிதிமந்திரி அருண் ஜெட்லி எழுதிய கட்டுரையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, ஹிட்லருடன் ஒப்பிட்டார்.
அருண் ஜெட்லியின் கருத்தை விமர்சனம் செய்த காங்கிரஸ் ஒப்பீடு மிகவும் மோசமானது என்ற கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடும் வார்த்தைப்போர் நேரிட்டுள்ளது.
அருண் ஜெட்லிக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா, இந்திரா காந்தி அவருடைய காலத்தில் மிகப்பெரிய தலைவர், ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட பிரபலமான பிரதமர். அருண் ஜெட்லி இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிடுவது அபத்தமானது, மூர்க்கத்தனமானது. வரலாற்றை திரிப்பதாகும். இந்திரா காந்தியின் அரசை அரசியலமைப்பற்ற முறையிலும், ஜனநாயகமற்ற முறையிலும் குலைக்க முயற்சிசெய்யப்பட்டது. நெருக்கடி நிலையானது சரியான பாதையில் இருந்து விலகலாகும், இந்திரா காந்தியும் வருத்தம் தெரிவித்துள்ளார். அருண் ஜெட்லி மறதியால் பாதிக்கப்பட்டுள்ளார். சர்வாதிகாரிகள் தேர்தலை நடத்தவில்லை.
இந்திரா காந்தி நெருக்கடி நிலையை விலக்கி, சுதந்திரமான தேர்தல்களையும் நடத்தினார். அவர் தன்னுடைய தோல்வியை தழுவினார். அதனையும் ஏற்றுக்கொண்டார். ஹிட்லரை பற்றியே அருண் ஜெட்லி நினைப்பது புரிந்துக்கொள்ளக்கூடியது. அவர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா பள்ளியில் இருந்து வந்தவர். அவர்கள் ஹிட்லரையும், சர்வாதிகாரத்தையும் கொண்டாடுபவர்கள். இதுதொடர்பான விவாதம் 1980-ம் ஆண்டை முடித்து வைக்கப்பட்டது. இந்திய மக்கள் அவரை பெரும்வாரியான மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்த்தினார்கள். அவருடைய எதிராளிகளை குப்பையில் எறிந்தார்கள் என பதிவிட்டுள்ளார்.
ஜனநாயகம் விவகாரத்தில் மத்திய பா.ஜனதா அரசை விமர்சனம் செய்துள்ள ஆனந்த் சர்மா, இந்திரா காந்தியின் பங்களிப்பு, துணிச்சல் மற்றும் தியாகத்தை இத்தேசத்தின் வரலாறு குறிப்பிடுகிறது. வங்காளதேச விடுதலை இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் எந்தஒரு ராணுவத்திற்கும் கிடைக்காத வெற்றி, அதனை மறக்க முடியாது. இந்தியா அணு ஆயுத வல்லமை கொண்ட நாடாகியது, விண்வெளியிலும் தடம் பதித்தது. இந்திரா காந்தியின் வீரமரணத்தை பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அவமதிக்கவோ, சிறுமைப்படுத்தவோ முடியாது. இந்திய மக்கள் அவரை ஹீரோவாகவே நினைவில் கொள்வார்கள் என்று ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.