கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்க பணிகள் மற்றும் நிலக்கரி கொள்ளை சம்பவங்கள் பலகாலங்களாக நடந்து வருகின்றன. இதனால், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல ஆயிரம் கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி. எம்.பி.யான இவர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக உள்ளார். அதன் பொது செயலாளராக வினய் மிஸ்ரா உள்ளார்.
ஆளும் திரிணாமுல் காங்கிரசின் தலைவர்களுக்கு நிலக்கரி மாபியா கும்பல் பணம் கொடுத்து கடத்தல் தொழிலை செய்து வந்துள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இதில், வினய் மிஸ்ரா வழியே பணபரிமாற்றம் நடந்து வந்துள்ளது. கடந்த டிசம்பர் 31ந்தேதி, வினயின் வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு நடந்தது.
ஆனால், சி.பி.ஐ. பிடியில் சிக்காமல் வினய் தப்பி விட்டார். அவருக்கு எதிராக சி.பி.ஐ. அமைப்பு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து உள்ளது. இந்த சூழலில், அபிஷேக்கின் மனைவி ருஜிரா பானர்ஜிக்கு நிலக்கரி கடத்தல் சம்பவத்தில் உள்ள தொடர்பு பற்றி விசாரணை மேற்கொள்வதற்காக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
அபிஷேக்கின் உறவினர் மேனகா காம்பீருக்கும் சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. எனினும், இதுபற்றி அபிஷேக் பானர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என்னுடைய மனைவி பெயரில் சி.பி.ஐ. நோட்டிஸ் வழங்கியது. சட்டத்தின் பூமியில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனினும், அவர்கள் எங்களை அச்சுறுத்த இந்த யுத்திகளை பயன்படுத்தலாம் என்று எண்ணினால், அவர்கள் தவறு செய்கின்றனர். மிரட்டலுக்கு பணிந்து செல்லும் நபர்கள் நாங்கள் கிடையாது என பதிவிட்டார்.
தொடர்ந்து, சி.பி.ஐ. அதிகாரிகள் அபிஷேக்கின் மனைவி மற்றும் அபிஷேக்கின் உறவினரான மேனகா காம்பீரிடம் விசாரணை நடத்தியுள்ளது. தொடர்ந்து வழக்குடன் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நிலக்கரி ஊழல் விவகாரம் சூடு பிடித்துள்ளது. நிலக்கரி ஊழல் வழக்கில் கொல்கத்தாவில் உள்ள தொழிலதிபரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த தொழிலதிபர் வழியே பல்வேறு அரசு உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் லஞ்ச பணம் பெற்றுள்ளனர் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.